ஹேமமாலினி

இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். அனந்தசாமி தயாரித்த “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம்வந்த ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 16, 1948

இடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு(இந்தியா)

பணி: திரைப்பட நடிகை

புனைப்பெயர்: கனவுக் கன்னி

முதல் திரைப்படம்: “சப்னோ கா சௌதாகர்”

பிறப்பு:

ஹேமமாலினி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 16, 1948 ஆம் ஆண்டு சக்கரவர்த்திக்கும், ஜெயாவிற்கும் மகளாக பிறந்தார். இவருடைய தந்தை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அதிகாரியாகவும், தாய் சமூக சேவகராகவும் பணிபுரிந்து வந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை:

தந்தை தில்லியில் வேலைப்பார்த்து வந்ததால், ஹேமமாலினியின் பள்ளிப்படிப்பு அங்கேயே தொடங்கியது. அவர் பள்ளிப்படிப்போடு, பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார். பின்னர், அவருடைய தந்தைக்கு சென்னைக்கு பணிமாற்றம் கிடைத்ததால், ஹேமமாலினி தன்னுடைய நடனக் கலையை சென்னையில் தொடர்ந்தார்.

திரைப்பட வாழ்க்கை:

1963-ல் “இது சத்தியம்” என்ற திரைப்படத்தில் ஹேமமாலினியின் நடனம் இடம்பெற்றது. பின்னர், அவருடைய நடனத்தைப் பார்த்த அனந்தசாமி, அவருடைய “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்திப் படத்தில் ஹேமாவை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அதன் மூலம் “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தில் கதாநாயகியாக ஹேமமாலினி அறிமுகமானார். இப்படத்தின் கதாநாயகன் ராஜ்கபூர். படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ஹேமமாலினியின் தோற்றமும், நடிப்பும், நடமும் ரசிகர்களைக கவர்ந்தது எனலாம். பின்னர், தேவ் ஆனந்துடன் “ஜானி மேரா நாம்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ஹேமமாலினியைத் தேடிப் பல படங்கள் வந்தன. ரசிகர்களின் “கனவுக் கன்னியாக” மாறிப்போன அவர், இந்தி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.

ஹேமமாலினி, மீண்டும் தேவ் ஆனந்துடன் இணைந்து “தேரே மேரே சப்னே” என்ற திரைபடத்தில் நடித்தார். பின்னர், தர்மேந்திரா மற்றும் சஞ்சீவ் குமாருடன், ஹேமமாலினி  இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த “சீதா ஔர் கீதா” என்ற திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 1970-80 ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், 1975 ஆம் ஆண்டு வெளிவந்த “ஷோலே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.  ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப் பச்சன், அம்ஜத்கான், ஜெயபாதுரி ஆகியோர் நடித்த இப்படம் மும்பையில் ஒரு தியட்டரில் ஐந்தாண்டுகள் ஓடி சாதனைப் படைத்தது. இப்படத்தின் வெற்றி, ஹேமமாலினியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என கூறலாம். கமலுடன் இணைந்து “ஹேராம்” மற்றும் “தசாவதாரம்” போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹேமமாலினி நடித்த திரைப்படங்கள்:

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமமாலினி அவர்கள், சுமார் 25 ஆண்டுகாலம் இந்தித் திரைப்பட உலகில் புகழோடு விளங்கியுள்ளார். ஹேமமாலினி நடித்த திரைப்படங்களில் சில, ‘பாண்டவ வனவாசம்’, ‘சப்னோ கா சௌதாகர்’, ‘வாரிஸ்’, ‘ஜஹான் பியார் மிலே’, ‘தும் ஹசீன் மெய்ன் ஜவான்’, ‘ஷராஃபத்’, ‘ஆண்சூ ஔர் முஸ்கான்’, ‘ஜானி மேரா நாம்’, ‘பராயா தன்’, ‘நயா ஜமானா’, ‘லால் பத்தர்’, ‘அந்தாஸ்’, ‘தேரே மேரே சப்னே’, ‘சீதா ஔர் கீதா’, ‘ராஜா ராணி’, ‘கோறா ஔர் காலா’, ‘கரம் மசாலா’, ‘பாய் ஹோ தொ அய்ஸா’, ‘பாபுல் கி கல்யான்’, ‘ஷெரீஃப் பத்மாஷ்’, ‘பிரேம் பர்வத்’, ‘சுப்பா ருஸ்தம்’, ‘கெஹரி சால்’, ‘ஜுக்னு’, ‘ஜோஷீலா’, ‘துல்ஹன்’, ‘அமீர் கரிப்’, ‘தோஸ்த்’, ‘பிரேம் நகர்’, ‘பத்தர் ஔர் பாயல்’, ‘ஹாத் கி சஃபாயி’, ‘தர்மாத்மா’, ‘குஷ்பு’, ‘பிரதிக்யா’, ‘ஷோலே’, ‘ஷராஃபத் சோட தி மேனே’, ‘நாச் உடே சன்சார்’, ‘சாரஸ்’, ‘டஸ் நம்பரி’, ‘மெஹபூபா ஜானேமன்’, ‘ஷிரிடி கே சாய் பாபா’, ‘ட்ரீம் கேர்ள்’, ‘தில் கா ஹீரா’, ‘தி பர்னிங் ட்ரைன்’, ‘அலிபாபா ஔர் 40 சோர்’, ‘கிரான்த்தி’, ‘மேரி அவாஸ் சுனோ’, ‘சத்தே பெ சத்தா’, ‘தேஷ் ப்ரேமி’, ‘ரசியா சுல்தான்’, ‘அந்தா கானூன்’, ‘ஹம் தோனோ’, ‘சிதாபூர் கி கீதா’, ‘ஜமை ராஜா’, ‘ஹே ராம்’, ‘சென்சார்’, ‘அமன் கெ பரிஷ்தே’, ‘பாக்பான்’, ‘வீர்-சாரா’, ‘பாக்மதி’, ‘கங்கா’ மற்றும் ‘லாகா சுனரி மே டாக்’.

திருமண வாழ்க்கை:

ஹேமமாலினியை மணக்க பல நடிகர்கள் போட்டிப்போட்டனர். அவர்களில் தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் மற்றும் ஜித்தேந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார். இறுதியில் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு இஷா மற்றும் ஆஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

விருதுகள்:

  • 1999 ஆம் ஆண்டு “சீதா ஔர் கீதா” என்ற திரைபடத்திற்காக சிறந்த நடிகைக்கான “ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான “பத்மஸ்ரீ விருது”, 2000 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
  • வாழ்நாள் சாதனையாளருக்கான “ஜீ சினி விருது” 2003ல் வழங்கப்பட்டது.
  • “ஸ்டார் ஸ்கிரீன் விருது” (அமிதா பச்சன் உடன்) “பாக்பன்” ஜோடி நம்பர் ஒண்ணுக்காக வழங்கப்பட்டது.
  • 2003 ஆம் ஆண்டு ‘பாலிவுட் திரைப்பட சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
  • இந்திய பொழுதுபோக்குத்துறையில் ஹேமமாலினியின் பங்களிப்பைப் பாராட்டி, வர்த்தக இந்திய சேப்பர் கூட்டமைப்பு மற்றும் இன்டஸ்ட்ரி (FICCI) அமைப்பு மூலமாக  “வாழும் வரலாறு விருது” 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. (இவ்விருது, வாழும்போதே தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்).
  • இந்திய சினிமாவில் ஹேமமாலினியின் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் விதத்தில் நார்வே அரசு, ஹேமமாலினியின் அஞ்சல் தலையை வெளியிட்டது.

ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் இந்தித் திரைப்பட உலகில் புகழோடு விளங்கிய ஹேமமாலினி அவர்களுடைய சாதனைகளும், அவர் பெற்ற புகழும் மகத்தானவையே!!!

Comments

  1. gomathy says:

    hemamalini so quite, very nice person vazha valamudan.