தேவ் ஆனந்த்
தேவ் ஆனந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராவார். திரைப்படங்களில் நடிக்கும் போது, தலையசைத்துக் கொண்டே மிக வேகமாக உரையாடல்கள் வழங்கும் அவரது பாணி, புகழ்பெற்ற முத்திரைகள் பதித்து, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், பலராலும் பின்பற்றப்பட்டது. அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து, பல விருதுகளையும் வென்றுள்ளார். அவர் புகழின் மகுடமாக இருந்த நேரத்தில், அவரது சமகாலத்தவர்கள் மத்தியில் மிகவும் கவர்ச்சியானவராக கருதப்பட்டார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதுகளான ‘தாதாசாகேப் பால்கே’ விருதும், ‘பத்ம பூஷண்’ விருதும் வழங்கியது. இந்திய சினிமா வரலாற்றில் மிக பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களில் ஒருவராக கருதப்பட்ட தேவ் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 26 செப்டம்பர், 1923
பிறந்த இடம்: ஷக்கர்கர் தாலுகா, பஞ்சாப் மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு: 3 டிசம்பர், 2011
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நவ்கேதன் படங்களின் இணை நிறுவனர்
நாட்டுரிமை: இந்தியா
பாலினம்: ஆண்
பிறப்பு
தேவ் ஆனந்த் அவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பிரிக்கப்படாத பஞ்சாபிலிருக்கும் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷக்கர்கர் தாலுகாவில் (இப்போது பாகிஸ்தானிலுள்ள நரோவல் மாவட்டத்தில் உள்ளது) செப்டம்பர் 26 ஆம் தேதி, 1923 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் தரம் தேவ் பிஷோரிமல் ஆனந்த் ஆகும். அவரது தந்தை பெயர் பிஷோரி லால் ஆனந்த். இவர் ஒரு பிரபலமான வழக்கறிஞர் ஆவார். ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்த அவருக்கு, மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தனர். அவரது மூத்த அண்ணனான மன்மோகன் ஆனந்த் ஒரு வழக்கறிஞர், இரண்டாவது அண்ணன், சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் அவரது தம்பி, விஜய் ஆனந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். அவரது தங்கையின் பெயர், ஷீலா காந்தா கபூர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
தேவ் ஆனந்த் அவர்கள், தனது இளமைப்பருவத்தை, குர்தாஸ்பூரிலிருக்கும் கரோட்டா என்னும் கிராமத்தில் கழித்தார். தனது பள்ளிப்படிப்பை, ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் டல்ஹௌசியில் உள்ள சேக்ரட் ஹார்ட் பள்ளியில் முடித்த பின்னர், மேற்படிப்புக்காக லாகூர் சென்றார். அங்குள்ள அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
திரையுலகப் பிரவேசம்
நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம்பருவத்திலிருந்தே தேவ் ஆனந்த் அவர்களுக்கு இருந்ததால், 1940ன் தொடக்கத்தில் தனது வீட்டை விட்டு திரைப்பட தொழில் மையமாக கருதப்பட்ட மும்பைக்கு வந்தார். வாய்ப்புகள் தேடி அலைந்த அவர், தற்காலிகமாக, ராணுவ தணிக்கை அலுவலகத்திலும், கணக்குப்பதிவியல் நிறுவனத்திலும் வேலை பார்த்தார். அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக இருந்ததால், 1946ல் பிரபாத் பிலிம் ஸ்டுடியோஸின் உரிமையாளர், பாபு ராவ் பாய் அவர்களின் படமான ‘ஹம் ஏக் ஹை’ என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, 1948ல் பாம்பே டாக்கீஸ் தயாரித்த, அசோக் குமார் அவர்களின் படமான ‘ஜித்தி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, மேலும் அப்படம் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது.
திரையுலக வாழ்க்கை
ஜித்தியின் வெற்றிக்குப் பிறகு, தேவ் ஆனந்த் அவர்கள், 1949ல், அவரது சொந்த நிறுவனமான ‘நவ்கேதன் பிலிம்சை’ நிறுவினார். 1940களில், தேவ் ஆனந்த் அவர்கள், சுரையா என்ற நடிகையுடன் சேர்ந்து பல வெற்றிப் படங்களான ‘வித்யா’ (1948), ‘ஜீத்’ (1949), ‘ஷைர்’ (1949), ‘அஃப்சர்’ (1950), ‘நிலி’ (1950), ‘தோ சிதாரே’ (1951) மற்றும் ‘சனம்’ (1951), நடித்தார். இவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல், அது அவர்களுக்கிடையே காதலையும் மலரச் செய்தது. பின்னர், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்ததால், சுரையாவின் வீட்டில் எதிர்ப்பு வந்ததால், அவர்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இருவரும் இணைந்து நடிப்பதை விட்டனர்.
1951ல், தேவ் ஆனந்த் அவர்கள், குரு தத் என்பவரின் கிரைம் திரில்லர் படமான ‘பாசியில்’, கல்பனா கார்த்திக் என்பவருடன் இணைந்து நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால், தேவ் ஆனந்த், கல்பனா கார்த்திக்குடன் பல படங்களில் சேர்ந்து நடித்தார். ‘ஆந்தியா’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘ஹவுஸ் எண் 44’ மற்றும் ‘நவ் தோ க்யாரஹ்’ போன்றவை அவர்கள் இருவரும் தொடர்ந்து நடித்த படங்களாகும்.
பின்னர், அவருக்கென்ற தனிப்பட்ட பாணியை வெளிப்படுத்தி, ரொமாண்டிக் ஹீரோ என்ற இமேஜைப் பெற்றுத்தந்த திரைப்படங்கள் – ‘வீட்டு எண் 44’, ‘CID’, ‘பாக்கெட் மார்’, ‘முனிம்ஜி’, ‘ஃபன்டூஷ்’, ‘ஏக் கே பாத் ஏக்’, ‘சோல்வோ சால்’, ‘காலா பானி’, ‘காலா பஜார்’, ‘பாத் ஏக் ராத் கி’, ‘பம்பாய் கா பாபு’, ‘ஷராபி’, ‘ராஹீ’, மற்றும் ‘ஆந்தியா’. ‘மன்ஸில்’, ‘தேரே கர் கே சமன்’, ‘கினாரே கினாரே’, ‘மாயா’, ‘அஸ்லி-நக்லி’, ‘ஜப் பியார் கிஸி சே ஹோதா ஹை’, ‘மஹால்’ மற்றும் ‘தீன் தேவியான்’
மேலும் அவர் நடித்த படங்களில் சில: ‘கைட்’, ‘ஜுவல் தீஃப்’, ‘ஜானி மேரா நாம்’, ‘தேரே மேரே சப்னே’. அவர் சுரையா, கல்பனா கார்த்திக்கைத் தவிர, நூத்தன், வஹீதா ரஹ்மான், மீனா குமாரி, மாலை சின்ஹா, சாதனா ஷிவ்தாசனி, ஆஷா பரேக், சிமி கரேவால், நந்தா, வைஜயந்திமாலா, தனுஜா, அஞ்சு மகேந்துரு, ஃபர்யல் மற்றும் ஹெலன், சஹீதா, ஜீனத் அமன், ராகீ, யோகீதா பாலி, ஷர்மிளா தாகூர், பர்வீன் பாபி, மற்றும் டீனா முனிம் போன்ற நடிகைகளுடன் நடித்துள்ளார்.
1970களின், தொடக்கத்தில் அவர் ‘கல் ஆஜ் அவுர் கல்’ மற்றும் ‘தரம் கரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தாலும், முன்னணி கதாபாத்திரத்தில் ‘யே குலிஸ்தான் ஹமாரா’, ‘சுப்பா ருஸ்தம்’, ‘அமீர் கரீப்’, ‘ஹீரா பண்ணா’, ‘வாரன்ட்’, ‘டார்லிங் டார்லிங்’, ‘புல்லெட்’, ‘ஹம் நவஜவான்’ மற்றும் ‘லஷ்கர்’ போன்ற படங்களில் நடித்து தனக்கென நீங்கா, அழிவற்ற இடத்தை பாலிவுட் திரையுலகில் பிடித்தார்.
அவர் தயாரித்த ஒன்பது படங்களில், ‘அவ்வல் நம்பர்’ என்ற திரைப்படம் வெற்றியடைந்தது. அவர் இறுதியாக நடித்த திரைப்படம், 2001ல் வெளியான ‘சார்ஜ்ஷீட்’.
இல்லற வாழ்க்கை
‘டாக்ஸி டிரைவர்’ படப்பிடிப்பின் போது, தேவ் ஆனந்தும், கல்பனா கார்த்திக்கும் காதல் வயப்பட்டதால், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 1954ல், அவர்கள் திருமணம் நடந்தது. 1956ல், அவர்களுக்கு சுனில் ஆனந்த் என்ற மகனும், பின்னர் சில ஆன்டுகள் கழித்து, தேவினா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்குப் பின், கல்பனா நடிப்புத்தொழிலைக் கைவிட்டதால், அவர்கள் இருவரும் திரையில் இணைந்து தோன்றிய கடைசி படம், ‘தோ நவ் க்யாராஹ்’ என்பதாகும்..
விருதுகளும், அங்கீகாரங்களும்
பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்ற பெருமை, தேவ் ஆனந்த் அவர்களையே சேரும்.
தேவ் ஆனந்த் அவர்கள், 1959ல் ‘காலா பாணி’ மற்றும் 1967ல் ‘கைட்’ படத்தின் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றார். ‘கைட்’ படம், சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதினை இவருக்கு பெற்றுத்தந்தது.
1991: வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
2001: ‘பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
2002: தாதாசாஹேப் பால்கே விருது பெற்றார்.
இறப்பு
மருத்துவ பரிசோதனைக்காக, தேவ் ஆனந்த் அவர்கள், 2011 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றார். அவர் அங்குள்ள வாஷிங்டன் மய்ஃபேர் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தனது 88வது வயதில், டிசம்பர் 3 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
காலவரிசை
1923: பஞ்சாபிலிருக்கும் ஷக்கர்கர் தாலுகாவில் செப்டம்பர் 26 ஆம் தேதி, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.
1940: வீட்டை விட்டு மும்பைக்கு வந்தார்.
1946: முதல் படமான ‘ஹம் ஏக் ஹை’ என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1948: ‘ஜித்தி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1949: அவரது சொந்த நிறுவனமான ‘நவ்கேதன் பிலிம்சை’ நிறுவினார்.
1954: கல்பனா கார்த்திக் என்ற நடிகையைக் காதலித்து மணமுடித்தார்.
1956: அவருக்கு சுனில் ஆனந்த் என்ற மகன் பிறந்தார்.
1991: வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
2001: ‘பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
2001: அவருது கடைசி படமான ‘சார்ஜ்ஷீட்’ வெளியானது.
2002: தாதாசாஹேப் பால்கே விருது பெற்றார்.
2011: தனது 88வது வயதில், டிசம்பர் 3 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு, லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்தார்.