வடிவேலு

Vadivelu

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960  ஆம் ஆண்டு அக்டோபர் 10  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்

1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வெற்றிப் பயணம்

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து  2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி

கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).

விருதுகள்:

  • ‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
  • ‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
  • ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நகைச்சுவை வசனங்கள்

‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி,  நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

Comments

  1. Bakkiyalakshmi says:

    I Like Vadivelu Comedi

  2. mohamed ali jinna says:

    hello vadivelu sir,i like your all comedy scenes

    best of luck.. May you live a long life…

  3. g.premkumar says:

    good comedian

  4. உங்க்கள் படைப்பை முழுவதும் படித்தேன். ஏனென்றால் நான் வடிவேல் ரசிகை

  5. அலெக்ஸ் ராஜேஷ் says:

    தனது வாழ்கையை அரசியலில் புகுத்தி அளித்து விட்டார் .அரசியல் காமடி தெரியாத மனிதன் இவர்

  6. A.M.M.Manishangaran says:

    I LIKE THIS.I LOVE VADIVELU’S COMEDY.