சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்துப் படிக்கவும்.
பிறப்பு: 1 அக்டோபர் 1927
பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: 21 ஜூலை 2001
தொழில்: நடிகர், அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
ஆரம்பகால வாழ்க்கை
சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.
திரையுலக வாழ்க்கை:
திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.
தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
விருதுகள்:
1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
இறப்பு
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
I LIKE THIS.I LOVE SIVAJI GANESAN and HIS ACTING.