சத்யஜித் ரே

Satyaji-Ray

‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மே 2, 1921

இடம்: கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா

பணி: இயக்குனர், எழுத்தாளர்,  இசையமைப்பாளர்,  தயாரிப்பாளர்

இறப்பு: ஏப்ரல் 23, 1992

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சத்யஜித் ரே அவர்கள், 1921  ஆம் ஆண்டு மே மாதம் 2  ஆம் நாள், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் சுகுமார் ராய் என்பவருக்கும், சுப்ரபாவுக்கும் மகனாக பிறந்தார். அவருடைய தாத்தாவான உபேந்திரா கிஷோர் ரே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், ஓவியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சத்யஜித் ரேவிற்கு இரண்டு வயதே இருக்கும் பொழுது, அவருடைய தந்தையான சுகுமார் ராய் கல-அசர் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு காலமானார். சிறுவயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்ததால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட சத்யஜித் ரே, தன் தாத்தாவால் உருவாக்கப்பட்ட பத்திரிக்கை நிருவவனத்தை விற்றுவிட்டு, தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்று தங்கினர். கொல்கத்தாவிலுள்ள ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், ப்ரெசிடென்சி கல்லூரியில் (கொல்கத்தா பல்கலைக்கழகம்) பொருளாதாரத் துறையில் பி.ஏ படிப்பை முடித்தார். தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, தாயின் அறிவுறுத்தலின் பேரில் “சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில்” சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். அங்கு வரைகலை வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிறிய வகையிலான ஓவியம் தீட்டுதல் என பல்வேறு கலைகளில் சிறப்பு பெற்று விளங்கினார்.

இயக்குனராவதற்கு முன் சத்யஜித் ரே மேற்கொண்ட பணிகள்

தன்னுடைய ஓவியப் படிப்பை முடித்த பிறகு, டி.ஜெ கெய்மர் என்னும் பிரிட்டிஷ் விளம்பரக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் ஒரு சில நிறுவனங்களில் வேலைபார்த்த ரேவுக்கு பல புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. ஜிம் கார்பட்டின் புத்தகங்கள் மற்றும் ஜவகர்லால் நேருவால் எழுதப்பட்ட “டிஸ்கவரி ஆஃப் இந்தியா”, பூபதி பூஷன் பாந்தோபாத்யாவின் பதேர் பாஞ்சாலி நாவல் போன்ற புகழ்பெற்ற புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து புகழ்பெற்றார். அதுமட்டுமல்லாமல், பதேர் பாஞ்சாலி கதை ரேவின் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவந்தது. பிறகு, இயக்குனரான சித்தானந்த தாஸ் குப்தாவுடன் இணைந்து கொல்கத்தாவில் திரைப்பட சங்கமொன்றையும் துவங்கினார். 1949 ஆம் ஆண்டு பிஜோய தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு, இவர்களுக்கு சந்தீப் என்ற மகன் பிறந்தான்.

திரைப்பட இயக்குனராக ரே

பிரஞ்சு மொழித் திரைப்பட இயக்குனர் ரெனுவார் தன்னுடைய “ரிவர்” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்தபொழுது, அவருடைய படப்பிடிப்பை பார்க்கும் வாய்ப்பு ரேவுக்குக் கிடைத்தது மட்டுமல்லாமல், அவரோடு பழக்கமும் ஏற்பட்டது. நீண்ட காலமாக தன்னுடைய மனதில் இருந்த பதேர் பாஞ்சாலி கதையை அவரிடம் கூறி ஆலோசனையும் பெற்றார். பிறகு 1950 ஆம் ஆண்டு டி.ஜெ கெய்மர் அலுவலக வேலைப் பணிக்காக லண்டனுக்கு சென்றார். மூன்று மாத காலம் லண்டனில் பணிசெய்த ரே சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்த்தார். ‘விக்டோரியோ டி சிக்காவின் பைசைகிள் தீவ்ஸ்’ என்ற திரைப்படம் அவரை மிகவும் கவர்ந்தது. இறுதியாக, பணி முடிந்து இந்தியா திரும்பிய அவருக்கு தன்னுடைய மனதில் திரைக் காவியமாக சுழன்றுகொண்டிருந்த “பதேர் பாஞ்சாலியை” இயக்கத் துணிந்தார்.

காலத்தை வென்ற பதேர் பாஞ்சாலி திரைப்படம் உருவான பின்னணி

பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை வணிக நோக்கமல்லா ஒரு கலைப்படைப்பாக உருவாக்க எண்ணி பலபேரிடம் உதவி கோரினார் ஆனால், கதை சரியில்லை என்று பல காரணங்களை கூறி அனைவரும் மறுத்ததால், தானே இயக்க முடிவுசெய்தார். தன்னுடைய மனைவியின் நகையை விற்று, படப்பிடிப்பை தொடங்கிய ரே அவர்கள் நிதிப் பற்றாக்குறையால் பெரிதும் சிரமப்பட்டார். மீண்டும் பலபேரிடம் நிதி உதவி கோரியும், பணம் கிடைக்காத சூழ்நிலையில் வங்காள முதலமைச்சராக இருந்த பி.சி ராயிடம் விளக்கமாக எடுத்துக் கூறி நிதியுதவி அளிக்க வேண்டினார். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு தில்லிக்கு சென்ற அவர், நேருவிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிக் கூறினார். நேருவின் உதவியால் வங்கதேச முதல்வரின் ஒரு சில நிபந்தனைகளின் பேரில் நிதியுதவி அளிக்க வங்கதேச அரசு முன்வந்தது. இவ்வாறாகப் பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்படமாகவும் தேர்வுசெய்யப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மற்றும் உலகப் புகழ்பெற்ற சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் போன்றவர்கள் இத்திரைப்படத்தை உலகிலேயே தலைச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என மிகவும் புகழ்ந்துப் பாராட்டினர். உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக “பதேர் பாஞ்சாலி” திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சத்யஜித் ரேயின் வெற்றிப் பயணம்

தன்னுடைய “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்திற்கு பிறகு, அவர் மேற்கொண்ட எல்லாப் படைப்புகளும் உலக அளவில் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. 1958 ஆம் ஆண்டு “அபராஜிதோ” மற்றும் 1959 ஆம் ஆண்டு “அபுர் சன்சார்” என்ற இரண்டு திரைப்படத்தை உருவாக்கினார். இதில் “அபராஜிதோ” திரைப்படம் வெனிஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் “தங்க சிங்கம்” விருது வென்றது மட்டுமல்லாமல், உலகத் தரமிக்க இயக்குனர் வரிசையில் சத்யஜித் ரேவும் ஒருவரானார். பிறகு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த அபு வரிசையில், மூன்றாவது படமான “அபுர்சன்சார்” திரைப்படம் விமர்சகர்களால் மிகச் சிறந்த படம் என புகழ்பெற்றது.

பிற படைப்புகள்

இவர் இயக்குனராக மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தாமல், தன்னுடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட “சந்தோஸ்” என்ற சிறுவருக்கான இதழையும் புதுப்பித்து சிறுகதைகள், ஓவியங்கள், உளவியல் கதைகள், தேவதை கதைகள், மாயாஜால கதைகள், அறிவியல் தொழில்நுட்பக் கலைகள் என சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டார். பிராவோ ப்ரபோசர் ஷோங்கு,  ப்ஹடிக் சந்த், தி அட்வென்ச்சர் ஆப் பெலுடா, மிஸ்டரி ஆப் தி பிங்க் பியர்ல், பெலுடா லாஸ்ட் கேஸ், நைட் ஆப் த இண்டிகோ, ட்வென்டி ஸ்டோரிஸ் போன்ற கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.

சாருலதா திரைப்படம்

1964 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாருலதா’ திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய புகழை தேடித்தந்தது. இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர். ரேயின் முந்தைய திரைப்படங்களில் இருந்து இத்திரைப்படம் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டியது. 1964 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான ‘வெள்ளிக் கரடி விருதினை’ வென்றது மட்டுமல்லாமல், 1965 ஆம் ஆண்டு ‘தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினையும்’ வென்றது.

சத்யஜித் ரேயின் பிற திரைப்படங்கள்

‘பரஷ் பதர்’ (1958),  ‘தேவி’ (1960), ‘தீன் கன்யா’ (1961), ‘கஞ்சன்யங்கா’ (1962), ‘அபிஜன்’ (1962), ’மஹாநகர்’ (1963), ‘சாருலதா’ (1964), ‘மஹாபுருஷ்’ (1965), ‘காப்புருஷ்’ (1965),  ‘நாயக்’ (1966), ‘சிரியாக்கானா’ (1967), ‘கூப்பி கைன் பாகா பைன்’ (1968), ‘அரான்யர் டின் ராத்ரி’ (1970), ‘சிக்கிம்’ (1971), ‘சீமபத்தா’ (1971), ‘த இன்னார் ஐ’ (1972), ‘ப்ரதித்வந்தி’ (1972), ‘அஷானி சங்கத்’ (1973), ‘சோனார் கெல்லா’ (1974), ‘ஜன ஆரண்ய’ (1976), ‘பாலா’ (1976), ‘ஷத்ரன்ஜ் கெ கிலாடி’ (1977), ‘ஜொய் பாபா பெலுநாத்’ (1978), ‘காரே பைரே’ (1984), ‘சுகுமார் ராய்’ (1987), ‘ஞானஷத்ரு’ (1989), ‘ஷாக புரொஷகா’ (1990), ‘அகந்துக்’ (1991) போன்ற அனைத்து திரைப்படங்களும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவருடைய ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

தலைச்சிறந்த ஆஸ்கார் விருது

உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “ஆஸ்கார்” விருதை” 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில், ஆஸ்கார் குழு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார்” விருதை” சத்யஜித் ரேவுக்கு அறிவித்தது. உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படும் இந்த விருதை, நேரில் பெற விரும்பினார். ஆனால், உடல்நலக் குறைவால் ரே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், இரண்டு பேர் கொண்ட ஆஸ்கார் குழு அவர் இருந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆஸ்கார் விருதினை அவரிடம் ஒப்படைத்தது.

விருதுகளும், மரியாதைகளும்

 • 1958 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
 • 1956 ஆம் ஆண்டு பதேர் பாஞ்சாலி திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1959 ஆம் ஆண்டு “ஜல்சாகர்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1960 ஆம் ஆண்டு “அபுர் சன்ஸார்”, மற்றும் 1962ல் “தீன் கன்யா”, போன்ற திரைப்படத்திற்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1963ஆம் ஆண்டு “அபிஜன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1965 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.
 • 1965 ஆம் ஆண்டு “சாருலதா”, 1967ல் “நாயக்”, 1968ல் “சிரியாக்கானா” போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1969 ஆம் ஆண்டு “கூப்பி கைன் பாகா பைன்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1971 ஆம் ஆண்டு “ப்ரதித்வந்தி” திரைப்படத்திற்காக ‘நான்கு தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1972 ஆம் ஆண்டு மற்றும் 1973 ஆம் ஆண்டு “அஷானி சங்கத்” திரைப்படத்திற்காக ‘இரண்டு தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1975 ஆம் ஆண்டு “சோனார் கெல்லா” திரைப்படத்திற்காக ‘மூன்று தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டது.
 • 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.
 • 1976 – ஆம் ஆண்டு “ஜன ஆரண்ய”, 1981ல் “ஹைரக் ராஜர் தேஷே”, 1982ல் சத்காதி, 1985ல் “காரே பைரே”, 1990ல் “ஞானஷத்ரு”, போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது.
 • 1985 ஆம் ஆண்டு இந்திய அரசால் “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கப்பட்டது.
 • 1991 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்காக “ஆஸ்கார் விருது”.
 • 1992 ஆம் ஆண்டு “அகந்துக்” திரைப்படத்திற்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.
 • 1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.
 • கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, லண்டன் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டத்தினை’ வழங்கியுள்ளது.

இதைத் தவிர ‘இரண்டு ஃபிலிம்பேர் விருதுகள்’, ‘மாநில அரசின் விருதுகள்’, ‘பல வெளிநாட்டு விருதுகள்’ என மேலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இறப்பு

இப்படி உலக அளவில் இந்திய நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்த சத்யஜித் ரே அவர்கள், தன்னுடைய இறுதி காலத்தில் இருதய நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 70 வது வயதில் காலமானார்.

சுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய ரே அவர்களின் எல்லா திரைப்படங்களும் உலக அரங்கில் பரிசும், பாராட்டும் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென்று தனி முத்திரையை பெற்றதோடு, இந்தியத் திரைப்படங்களுக்கு கௌரவத்தையும் தேடித்தந்தது எனலாம். கலை சார்ந்த, மனித இயல்புகள் சார்ந்த அற்புதமான காட்சியமைப்புகளுடன் உருவான அவருடைய எல்லாப் படைப்புகளும் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன. இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக அற்புதமான திரைப்படங்களை இயக்கி, உலக சினிமாவின் மகத்தான அம்சங்களை இந்திய சினிமாவிற்கு கற்றுக் கொடுத்தார் ரே என்றால் அது மிகையாகாது.