தேவிகா ராணி

Devika-Rani

தேவிகா ராணி ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை ஆவார். திரைப்படத்துறையில், அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பத்ம ஸ்ரீ” விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியாவின் சிறந்த நடிகையாக போற்றப்பட்ட அவர், இந்திய திரையுலகின் முதல் பெண் நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார். இந்திய திரையுலகில் “தாதாசாகேப் பால்கே” விருது பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராக விளங்கிய தேவிகா ராணி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மார்ச் 30, 1908

இடம்: விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை

இறப்பு: மார்ச் 9, 1994

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

“தேவிகா ராணி சௌத்ரி” என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா ராணி அவர்கள், 1908  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30  ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல், இவருடைய குடும்பம் ‘நோபல் பரிசு’ பெற்ற ரவீந்தரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையதாகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே சிறந்த மாணவியாக விளங்கிய தேவிகா ராணி அவர்கள், 1920 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு லண்டனில், ரேடாவில்  ஸ்காலர்ஷிப் பெற்ற அவர், ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் மற்றும் வேந்திய இசை அகாதமியிலும் பயின்றார். அவர் எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பெற்றது மட்டுமல்லாமல், கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்விக்கற்று வந்தார். இங்குதான் இவருடைய பல வெற்றித் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பால் என்பவரை சந்தித்தார்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

1929 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இமான்ஷூ ராயைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வந்த நஜம் உல் அசனுடன் ஏற்பட்ட காதலால், 1936 ஆம் ஆண்டு தேவிகா ராணி நஜம் உல் அசனுடன் இணைந்தார். ஆனாலும், தேவிகா ராணி மீண்டும் தன்னுடைய கணவரான இமான்ஷூ ராவிடமே வந்து சேர்ந்தார். பிறகு, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

திரைப்படத்துறையில் தேவிகா ராணியின் பயணம்

1933 ஆம் ஆண்டு வெளிவந்த கர்மா திரைப்படத்தில் தன் கணவருடன் இணைந்து நடித்தார். தனது கணவரான இமான்ஷூ ராயுடன் நடித்த “கர்மா” என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக்காட்சியில் நடித்திருப்பார். இந்திய சினிமாவில், இதற்கு முன் எந்த சினிமாவிலும் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது கிடையாது. இந்தக் காட்சி, இக்காலக் கதாநாயகிகளுக்குப் போட்டிபோடும் வகையில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

1934 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து “பம்பாய் டாக்கிஸ்” என்ற திரைப்படத்தலத்தை நிறுவினார். அந்தக் காலக்கட்டத்தில், பாம்பே டாக்கிஸின் வருகையால், இந்திய திரைப்படங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்ததாக அமைந்தது. ‘அச்சுத் கன்யா’, ‘ஹமாரி பாத்’ (1943),  ‘துர்கா’ (1939), நிர்மலா’ ‘(1938), ‘வசன்’ (1938), ‘இஜத்’ (1937), ‘ஜீவன் ப்ரபாட்’ (1937) போன்ற திரைப்படங்களில் நடித்த தேவகா ராணி அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் இமான்ஷூ ராய் இறந்த பிறகு, பாம்பே டாக்கிஸ் நிர்வாகத்தை, சசாதர் முகர்ஜியுன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.  ஆனால், சசாதர் முகர்ஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாம்பே டாக்கிஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, பிலிம்ஸ்தான் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினர். இதனால் பாம்பே டாகிஸின் வளர்ச்சி சற்று குறைந்தது எனக் கூறப்படுகிறது.

விருதுகளும், மரியாதைகளும்

  • 1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்துறையில், தேவிகா ராணியின் பங்களிப்பை பாராட்டி, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 1978 ஆம் ஆண்டு “கௌரவ பல்கேரிய பதக்கம்” வழங்கப்பட்டது.
  • 1981 ஆம் ஆண்டு மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் ஆண்டு சயின்ஸ் இந்திய அகாடமியிலிருந்து ‘சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.

இறப்பு

தன்னுடைய கணவரின் இறப்புக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டு பெங்களூரில் வாழ்ந்து வந்த தேவிகா ராணி அவர்கள், 1994 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய 86 வது வயதில் இறந்தார்.