விசுவநாதன் ஆனந்த்

Viswanathan_Anand

‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்று போற்றப்பட்டவர். மேலும், 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார். இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1969

பிறப்பிடம்: மயிலாடுதுறை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: சதுரங்க விளையாட்டு வீரர்  

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

விசுவநாதன் ஆனந்த்  அவர்கள், 1969  ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “மயிலாடுதுறை” என்ற இடத்தில் தந்தையார் ‘விஸ்வநாதன் அய்யர்’, என்பவருக்கும், தாயார் ‘சுசீலாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர்க்கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.

சதுரங்க விளையாட்டில் விசுவநாதன் ஆனந்தின் பயணம்

ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, ‘டால்’ என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து, மேலும் பயிற்சிப்பெற்ற அவர், தனது பதினான்கு வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதுதினைப் பெற்ற அவர், 1985 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் ‘சாம்பியன் பட்டம்’ வென்றார்.

வெற்றிப் பயணம்

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், ஃபைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கானத் தகுதிச் சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார். 1991 ஆம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டிக்கு முதன் முதலாக தகுதிபெற்ற அவர், அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ கிரீவை’ வென்றாலும், காலிறுதிச் சுற்றில் அதே நாட்டைச்சேர்ந்த அனடோலி கார்போவிடம் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து, 1995-ல் அரையிறுதியிலும், 1996 ஆம் ஆண்டு பிசிஏ உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் இறுதிச்சுற்றிலும், 1997-ல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றிலும் தோல்விகண்ட விஸ்வநாதன் அவர்கள், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.

சதுரங்க விளையாட்டில், இந்தியாவின் புகழை இமயம் தொடச் செய்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 2003-ல் எப்ஐடிஇ ‘உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்’ பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சான் லூயிஸ் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர், 2007 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ‘இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும், தன்னுடைய பெயரை பதிவு செய்து இந்தியாவிற்குப் பெருமைத் தேடித்தந்தார். அதற்கு அடுத்த ஆண்டும் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ‘மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப் படைத்தார். 2010 –ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, ‘நான்காவது முறையாக சாம்பியன் பட்டம்’ வென்று மீண்டும் சாதனைப் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல், 2012 ஆம் ஆண்டு உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை சமன் முறி என்னும் ஆட்டத்தில் வீழ்த்தி ‘ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை’ வென்று உலக சாதனைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் நடத்தப்பட்ட உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

இல்லற வாழ்க்கை

‘சதுரங்க விளையாட்டின் ராஜா’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996 ஆம் ஆண்டு ‘அருணா’ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

  • 1985 – ‘அர்ஜுனா’ விருது.
  • 1987 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
  • 1987 ஆம் ஆண்டிற்கான, ‘தேசிய குடிமகன்’ மற்றும் ‘சோவியத் லேண்ட் நேரு’ விருது.
  • 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ‘ராஜீவ்காந்தி கோல் ரத்னா’ விருது.
  • 1998 – பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், ‘புக் ஆஃப் தி இயர்’ விருது.
  • 2000 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.
  • 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, ‘சதுரங்க ஆஸ்கார்’ விருது.
  • 2007 – இந்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.

தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார். இன்னும் தன்னுடைய அபாரத் திறமையால் பல சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு, வெற்றிக் கொடி நாட்டிவருகிறார். குறிப்பாக சொல்லபோனால், ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில், இந்தியாவின் புகழை கடைசிகாலம் வரை நிலைநிறுத்திய பெருமை நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்த்தையே சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.