ஜி. என். ராமச்சந்திரன்

G_N_Ramachandran

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது, அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும், இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

பிறப்பு: அக்டோபர்  8, 1922

பிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: ஜூலை 4, 2001

பணி: விஞ்ஞானி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் அவர்கள், தெற்கிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில்  ஜி. ஆர். நாராயணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக அக்டோபர்  8, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் 1942 ஆம் ஆண்டு தனது மின் பொறியியல் படிப்பைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பொறியியல் துறையை விட இயற்பியல் பயில மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவர் பிறகு இயற்பியல் துறைக்கு மாறினார். 1942-ல் இயற்பியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சி-யில் ஒரு ஆய்வு மாணவராகவும் சேர்ந்தார்.

1947 ஆம் ஆண்டு ஜி.என். ராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் (1947 முதல் 1949 வரை) தனது ஆய்வை மேற்கொண்டார், பின்னர் பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” எக்ஸ்ரே (X-Ray) நுண்ணோக்கிக்கான ஒரு ஆய்வை மேற்கொண்டார். இது எக்ஸ்ரே (X-Ray) துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜி.என். ராமச்சந்திரனின் அறிவியல் ஆராய்ச்சிகள்

1949 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” இயற்பியல் உதவி பேராசிரியராகவும் மற்றும் 1952-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார். 1954-ல் ராமச்சந்திரனின் கோபிநாத் கர்தாவுடன் சேர்ந்து சவ்வு என்ற மூன்று வடிவ அமைப்பை பற்றி ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பிறகு மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

1963 ஆம் ஆண்டு “மூலக்கூறு உயிரியல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், இந்த ஆய்வு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்தது. X-கதிர் படிகவியல், பெப்டைட் தொகுப்பு, பிசியோ ரசாயன பரிசோதனை, என்.எம்.ஆர் மற்றும் கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

1971-ல் ராமச்சந்திரனின் அவருடைய சக விஞ்ஞானி ஏ. வி. லக்ஷ்மிநாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்ரே வெட்டுவரைவு துறையில் சுழற்சி – கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை மேற்கொண்டனர். வெற்றிகரமாக முடிந்த இவர்களின் ஆய்வு அதே ஆண்டில் ஒரு பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

ஜி.என். ராமச்சந்திரன் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மரியாதைக்குரிய விஞ்ஞானி ஆவார். அவருடைய அறிவியல் ஆய்விற்காக கிடைக்கப்பெற்ற விருதுகள் சில:

  • 1961 –ல் இந்திய இயற்பியல் துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது” வழங்கப்பட்டது.
  • லண்டன் ராயல் சொசைட்டி ஆஃப்  ஃபெல்லோஷிப்.
  • 1999 –ல் படிகவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் (Ewald) பரிசை வழங்கியது.

இறப்பு

1998-ல் ஜி.என். ராமச்சந்திரனின் மனைவி ராஜலக்ஷ்மியின் இறப்பிற்கு பின், தனிமையில் தவித்த அவர் ஜூலை 4, 2001 ஆம் ஆண்டு தன்னுடைய 79-தாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

காலவரிசை

1922 – ஜி.என். ராமச்சந்திரன் அக்டோபர் 8 ம் தேதி பிறந்தார்.

1942 – பெங்களூரில் உள்ள “இந்திய அறிவியல் கழகம்” நிறுவனத்தில் ஒரு மாணவராக சேர்ந்தார்.

1942 – ஐ.ஐ.எஸ்.சியிலிருந்து இயற்பியல் பாடத்திற்காக முதுகலை பட்டம் பெற்றார்.

1947 – டி.எஸ்.சி பட்டம் பெற்றார்.

1947 – முனைவர் (PhD) படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் சென்றார்.

1949 – ஐ.ஐ.எஸ்.சியில் (பெங்களூரு) இயற்பியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

1952 – சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவராகப் பணியாற்றினார்.

1954 – “சவ்வு” என்ற மூன்று வடிவமைப்பு வெளியிடப்பெற்றது.

1963 – ராமச்சந்திரன் ப்ளாட் வெளியிடப்பட்டது.

1970 – பெங்களூரில் ஐ.ஐ.எஸ். மூலக்கூறு உயிரி இயற்பியல் பிரிவு உருவாக்கப்பட்டது.

1971 – எக்ஸ்-ரேவிலுள்ள வெட்டுவரைவு சுழற்சி கணிப்பு நெறிமுறைகள் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார்.

1998 – ராமச்சந்திரனின் மனைவி ராஜலட்சுமி காலமானார்.

2001 – ஜூலை 4ஆம் தேதி ராமச்சந்திரன் தனது 79 வயதில் மறைந்தார்.