சித்ரா (பாடகி)

CHITRA

‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “சின்னக்குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஆறு முறை தேசிய விருதையும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும்’ எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களில் என்றென்றும் புகழ்பெற்று விளங்கும் கானக்குயில் சித்ராவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை, 27 1963

இடம்: திருவனந்தபுரம், கேரளா மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட பின்னனி பாடகி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

“சின்னக்குயில்” என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா அவர்கள், 1963  ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன் நாயர் என்பவருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக ஒரு இசை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வானொலியில் புகழ்பெற்ற பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி வீணைக் கலையில் சிறந்தவராகவும் விளங்கியவர்கள்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளர்த்துக்கொண்ட அவர்,  தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினார். மேலும், அவருடைய தந்தை கிருஷ்ணன் நாயர், சித்ராவுக்கு சங்கீதம் மற்றும் இசைப் பயிற்சிகளைக் கற்றுத்தந்து, அவருக்கு முதல் ஆசானாக விளங்கினார். பின்னர் இசைத் துறையில் பி.ஏ இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற அவர், கேரளா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை தொடர்ந்து இசைத் துறையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

இசைப்பயணம்

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், 1979 ஆம் ஆண்டு எம்.ஜி ராதாகிருஷ்ணன் மூலம் மலையாளத்தில் திரைப்படப் பின்னணி பாடகியாக தன்னுடைய பயணத்தினைத் தொடங்கினார். மேலும், கே. ஜே. யேசுதாசுடன் இணைந்து, இந்திய மற்றும் வெளிநாடுகளில் பல இசைக் கச்சேரிகளில் பங்கேற்றதால் அவர்களுக்கு, பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தது. ரவீந்திரன், ஷியாம், ஜெர்ரி அமல்தேவ், கண்ணூர் ராஜன் மற்றும் ஜான்சன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இளையராஜாவின் இசையில், ‘நீ தானா அந்தக்குயில்’ திரைப்படத்தில் “பூஜைக்கேத்த பூவிது” மற்றும் “கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட” என்ற பாடல்கள் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆன அவர், 1985 ஆம் ஆண்டில், ‘துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயில் இசைக் கேட்டு” மற்றும் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவர்ந்தார். மலையாளப் பாடகி என்றாலும், தமிழில் தன்னுடைய அற்புதமான குரலாலும், சிறந்த உச்சரிப்பாலும் ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில், ‘பாடறியேன் படிப்பறியேன்’ மற்றும் ‘நானொரு சிந்து காவடி சிந்து’ என்ற பாடலை பாடி, இசை ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டார். மேலும், “பாடறியேன் படிப்பறியேன்” பாடலுக்காக ‘சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும்’ வென்று, புகழின் உச்சிக்கு சென்றார். தொடர்ந்து பாடிய அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி சிறப்புப் பெற்றார்.

தமிழ் பாடல்கள்

‘பூஜைகேத்த பூவிது’, ‘துள்ளி எழுந்தது பாட்டு’, ‘ஒரு ஜீவன் அழைத்தது’, ‘நானொரு சிந்து காவடி சிந்து’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே’, ‘தென்கிழக்கு சீமையிலே’, ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பட்டு’, ‘ஊலலலா’, ‘கண்ணாளனே எனது கண்ணை’, ‘எங்கே எனது கவிதை’, ‘அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை’, ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘இன்னிசை பாடிவரும்’ போன்ற பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

சித்ராவை தாக்கிய துயரம்

துபாயில் இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் சென்றிருந்தார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக தன்னுடைய ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக இறந்தாள். இந்த இழப்பைத் தாங்க முடியாமல் பாடுவதையே சிறிது காலம் நிறுத்தி இருந்தார்.

விருதுகளும் மரியாதைகளும்

  • 2005 – மத்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது.
  • 1997 – தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’
  • 2011 – சத்தியபாமா பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டம்’.
  • 2011 – ஆந்திரபிரதேச அரசு கலாச்சார கவுன்சில் மூலம் ‘பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருது’.
  • 1986 – ‘சிந்து பைரவி’ திரைப்படத்தில் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.
  • 1987 – ‘நகக்சதங்கள்’ மலையாளத் திரைப்படத்தில் “மஞ்சள் பிரசடவம்” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.
  • 1989 – ‘வைஷாலி’ மலையாளத் திரைப்படத்தில் “இந்துபுஷ்பம் சூடி நில்கும் ராத்திரி” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.
  • 1996 – ‘மின்சார கனவு’ திரைப்படத்தில், ‘மானா மதுரை’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது.
  • 1997 – ‘விராசத்’ திரைப்படத்தில் “பாயலி சுன் முன் சுன் முன் சுன்” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.
  • 2004 – ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான ‘தேசிய விருது’.

சுமார் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் திரைப்படப் பின்னணிப் பாடகியாக சிறப்பு பெற்று வரும் சித்ரா அவர்கள், ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதையும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதையும்’ வென்று, தமிழ், கன்னடம், கேரளா, ஆந்திரா போன்ற நான்கு மாநில விருதுகளை பெற்ற ஒரே பின்னணி பாடகி ஆவார். மேலும், ‘ஏழு முறை ஏசியாநெட் திரைப்பட விருது’ மற்றும் ‘மாத்ருபூமி திரைப்பட விருதையும்’, ‘ஒரு முறை பாலிவுட் திரைப்பட விருது’ மற்றும் ‘ஸ்டார் ஸ்கீரின் விருதையும்’ வென்றுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட உலகில் பல பாடகிகள் வந்து போனாலும், எல்லா ரசிகர்களாலும் மறக்க முடியாத பாடகியாக விளங்கி, இசை நெஞ்சங்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கே. எஸ். சித்ரா அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க இயலது.