அண்ணா ஹசாரே

Anna Hazare

அண்ணா ஹசாரே ஒரு சமூக ஆர்வலர் ஆவார். ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான “ஜன லோக்பால்” என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து, ஹசாரே பெரும் போராட்டத்தை நடத்திக்காட்டி அனைவராலும் “இரண்டாம் காந்தி” என்று அழைக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்தேர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரியாக பணியாற்றிய பிறகு மக்களுக்கு சேவைசெய்வதையே தன்னுடைய வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்ட அண்ணா ஹசாரேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூன் 15, 1937

இடம்: பிங்கார், மகராஷ்டிர மாநிலம், இந்தியா

பணி: சமூக ஆர்வலர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கிசான் பாபுராவ் ஹசாரே எனப்பட்ட அண்ணா ஹசாரே அவர்கள், 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பாபுராவ் ஹசாரேக்கும், லட்சுமிபாய் ஹசாரேக்கும் மூத்தமகனாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

அண்ணா ஹசாரேவின் தந்தை ஒரு மருந்தகத்தில் வேலைபார்த்து வந்தார், ஆனால், அவருடைய வருமானம் போதாத காரணத்தால் அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த கிராமமான “ரலேகன் சித்தி” என்ற இடத்திர்கு அவருடைய குடும்பம் இடம் பெயர்ந்தது. உறவினரின் உதவியால் ஏழாம் வகுப்புவரை படித்த அண்ணா ஹசாரே அவர்கள், நிதி பற்றாக்குறையால் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்தார். பிறகு தனியாக பூக்கடை ஒன்றினையும் தொடங்கினார்.

இந்திய இராணுவத்தில் அண்ணா ஹசாரே

1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. ஹசாரே போதிய உடல்தகுதி இல்லாதவராக இருந்த போதிலும், 1963 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பயிற்சி மேற்கொண்ட பிறகு ஒரு சிப்பாயாக தன்னுடைய பணியைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் “கேம் கரன்” துறையில் எல்லைப்பணிக்காக அனுப்பப்பட்டார் அங்கு நடந்த போர்கல அனுபவம் அவரை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார். அவர் தன்னுடைய ஓய்வு நேரங்களை சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவே போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி படிப்பதில் செலவிட்டார். பிறகு 1975 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வினை பெற்றுக்கொண்டு, தனது சொந்த ஊரான “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு வந்தார். 13 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்த அவர் சிக்கிம், பூட்டான், ஜம்மு & காஷ்மீர், அசாம், மிசோரம், மற்றும் லடாக் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.

ரலேகன் சித்தி கிராமத்தை மேம்படுத்துவதில் ஹசாரேவின் பங்கு

அண்ணா ஹசாரே அவர்கள், இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தன்னை மக்கள் சேவைக்கு அற்பணிக்க விரும்பினார். கடுமையான வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுசூழல் மற்றும் ஒரு நம்பிக்கை இழந்த கிராமமாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென தீர்மானித்தார். இராணுவப் பணியில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சீர்படுத்தினார். அதிக அளவில் இளைஞர்கள் தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திகொண்டதால் “தருண் மண்டல்” என்ற இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் கிராமத்தில் மதுக்கடைகளை மூடியது மட்டுமல்லாமல், மதுகுடிப்பவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. கிராமத்தில் பீடி, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவை விற்கத் தடைவிதிக்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு “தானிய வங்கி” என்ற ஒன்றை தொடங்கி, குறைந்த விலையில் தானியம் வழங்கப்பட்டு பசி மற்றும் கடன் தொல்லைக்கு முற்றுபுள்ளி வைத்தார். பிறகு “ஆற்று பள்ளதாக்கு வளர்ச்சித் திட்டத்தை” உருவாக்கி நிலத்தடி நீர் சேமிப்பின் மூலம் பாசனத்தை மேம்படுத்தவும் செய்தார். இந்த திட்டத்தின் மூலம், தண்ணீர் பற்றாக்குறை பெருமளவு தீர்க்கப்பட்டது எனவும் கூறலாம். அவர் அந்த கிராமத்திற்கு வரும்பொழுது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு பிறகு 1500 ஏக்கராக மாறியது. கால்நடை வளர்ச்சியை ஊக்குவித்து, பால் உற்பத்தியை பெருக்கவும் வழிவகை செய்தார். கிராமத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த 1976 ஆம் ஆண்டு ஒரு மாதிரிபள்ளியும், 1979ல் ஒர் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. ரலேகன் சித்தி கிராமத்தில் நிலவிய சமூக தடைகள் மற்றும் பாகுபாடுகள் அறவே ஒழிக்கப்பட்டது. “கூட்டு திருமண திட்டத்தின்” மூலம் ஏழை எளிய மக்களின் கடன் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்றாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமம், இந்தியாவில் பல கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது எனலாம். இந்த கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.

அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரானப் போராட்டங்கள்

ஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கமான “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற மக்களமைப்பை 1991 ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே “ரலேகன் சித்தி” கிராமத்தில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், தற்கால பணிநீக்கம் மற்றும் இடமாற்றத்திற்கு வழிவகுத்தது. 2003 ல் தேசியவாத காங்கிரசு அமைப்பின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டை எழுப்பி, 2003 ஆகஸ்ட் 9 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பிறகு, சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனிநபர் ஆணை குழு ஒன்றை நியமித்ததால், 2003 ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் மற்றும் அரசு உதவிப்பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட “தகவல் பெரும் உரிமைச் சட்டம்” 2005 ஆம் ஆண்டு நீக்கப்பட்டதால், இதற்கு எதிராக 2006 ஆகஸ்ட் 9ஆம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பிறகு, அரசு தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதால், 2006 ஆகஸ்ட் 19 ஆம் தேதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதம் போன்றவற்றிற்காக அண்ணா ஹசாரே கடுமையாகப் போராடினார். உணவு தானியங்களிலிருந்து, மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தும் போராடினார்.

ஜன்லோக்பால் மசோதா இயக்கம்

2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” (இந்தியாவில் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மசோதா ஆகும்) இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கினார். உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, வழக்கறிஞர் பிராஷாந்த் பூஷன், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் “ஊழலுக்கெதிரான இந்தியா” என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து இந்த “ஜன் லோக்பால் மசோதாவை” வரையறுத்தனர். சுதந்திரமான இந்த மசோதாவை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்ததால், ஹசாரே தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை 2011 ஏப்ரல் 5 ஆம் தேதி புது தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் தொடங்கினார்.

இந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டம் நாடுமுழுவதும் லட்சகணக்கான மக்களை அணிவகுக்கச் செய்தது. மேதா பட்கர், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதரவைக் கொடுத்தனர். சென்னை, மும்பை, அகமதாபாத், ஷில்லாங் போன்ற பலநகரங்களில் எதிர்ப்புகள் பெருகியதால், 2011 ஏப்ரல் 8 ஆம் தேதி அரசாங்கம் இவ்வியக்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது மட்டுமல்லாமல், ஒரு கூட்டுக்குழு அமைக்கவும், அந்த கூட்டுக்குழுவில் இந்திய அரசால் தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதநிதிகள் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2001 ஏப்ரல் 9 ஆம் தேதி அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். இந்த கூட்டுக்குழு அமைப்பில் இந்திய அரசு வேட்பாளராக பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் அரசியல் அல்லாத சமூக பிரதநிதிகளாக அண்ணா ஹசாரே, என்.சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இடம் பெற்றனர்.

உண்ணாவிரதத்தை முடித்துகொண்ட அவர், 2011  ஆகஸ்ட் 15 ஆம் தேதியை மசோதா அமைக்க கெடுவாக விதித்தார். கருப்புப்பணத்திற்கு எதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்தும், 2011 ஜூன் 5 ஆம் தேதி சமூக பிரதிநிதிகள் உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது, சுவாமி ராம்தேவ் அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல், லோக்பால் மசோதா நிறைவேற்ற படவில்லையென்றால், 2011  ஆகஸ்ட் 16 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக அறிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்தது. ஆனால், சிறையில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஹசாரேவிற்கு நாடுமுழுவதும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. 2011 ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுதலைசெய்யப்பட்டு ராம் லீலா மைதானத்திற்கு வந்த அவர், வலுவான “ஜன் லோக்பால் மசோதா” நிறைவேற தனது கடைசி மூட்சிவரை போராடப் போவதாகவும் அறிவித்து, தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 2011 ஆகஸ்ட் 28 ஆம் தேதி “லோக்பால் மசோதா” ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஊழலுக்கெதிரான தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை தன் பின்னால் அணிவகுக்கச் செய்த காந்தியவாதியான அண்ணா ஹசாரேவிற்கு இந்தப் போராட்டம் வெற்றியைத் தந்தாலும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அவர் மேல் விழத்தான் செய்தது. இருந்தாலும், அவருடைய போராட்டங்கள் இந்திய வரலாற்றில் மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தியது எனவும் கூறலாம்.

விருதுகளும் அங்கீகாரங்களும்:

 • 1986 – “இந்திரா பிரியதர்ஷனி வ்ரிஷமித்ரா விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது.
 • 1989 ஆம் ஆண்டு “வேளாண் பூஷணா விருது” மகாராஷ்டிர அரசால் வழங்கப்பட்டது.
 • 1990 ஆம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
 • 1992 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
 • 1996 ஆம் ஆண்டு “ஷிரோமணி விருது” வழங்கப்பட்டது.
 • 1997 ஆம் ஆண்டு “மஹாவீர் விருது” வழங்கப்பட்டது.
 • 1998 ஆம் ஆண்டு கேர் நிவாரண அமைப்பால் “கேர் சர்வதேச விருது” வழங்கப்பட்டது.
 • 2003 ஆம் ஆண்டு “வெளிப்படையான சர்வதேச ஒருமைப்பாட்டு விருது” வழங்கப்பட்டது.
 • 2005 ஆம் ஆண்டு ‘காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்’ மூலம் “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கப்பட்டது.
 • 2008 ஆம் ஆண்டு உலக வங்கியால் “சிட் கில் நினைவு விருது” வழங்கப்பட்டது.

காலவரிசை:

1937 – மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பிறந்தார்.

1952 – மும்பைக்கு சென்றார்.

1963 – இந்திய இராணுவத்தில் ஓட்டுனராக தேர்வு செய்யப்பட்டார்.

1965 – இந்திய பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானதாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.

1975 – இந்திய இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1990 – “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

1991 – “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் அமைப்பைத் தொடங்கினார்.

1992 –“பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

2003 –‘தகவல் பெரும் உரிமை சட்டம்’ அனுமதி பெற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

2011 – ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” கொண்டுவரகோரி உண்ணாவிரத போராட்டம்.

2011 – ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்து சிறையில் அடைத்தது.

Comments

 1. Preethy Jaganathan says:

  We should be proud to get this Great person in our Country..Let’s join our hands to thank him for his sacrifices…We salute for his Patrionage..