சத்திய சாய் பாபா

Satya_Sai

ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகப் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 23, 1926

பிறப்பிடம்: புட்டபர்த்தி (அனந்தபூர் மாவட்டம்), ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: ஆன்மீகவாதி, சமூக சேவகர்

இறப்பு: ஏப்ரல் 24, 2011

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே பக்திமார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

சாய் பாபா செய்த வியக்கதக்க அற்புதங்கள்

அவர் படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே!’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால்,  பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து னார்.

சாய் பாபாவின் ஆன்மீகப் பயணம் மற்றும் சமூக சேவைகள்

1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறது. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல கிராமங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தினை சீர் செய்து, மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார். பிறகு 1968 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இவர் மீது நடந்த கொலைமுயற்சி

ஜூன் 6, 1993 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள அவருடைய இல்லத்திற்குள் நான்கு இளைஞர்கள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து, கொலை செய்ய முயன்றனர். இதில் இரு பணியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அத்துமீறி நுழைந்த நால்வரும், காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இவர் மீது நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.

இறப்பு

ஸ்ரீ சத்திய சாய் பாபா தன்னுடைய இறுதிகாலத்தில், உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சத்திய சாய் மருத்துவக்கழக மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 28 தேதி அனுமதிக்கப்பட்டார். பிறகு அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டனர். இருந்தபோதும் 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.

பகவான் சத்திய சாய் பாபா அவர்களுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆன்மீக பக்தியில் ஈடுபாடு கொண்ட பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும், வர்த்தகர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக வழிபாடு செய்து வருகின்றனர்.

காலவரிசை

1926 – நவம்பர் 23 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பிறந்தார்.

1954– புட்டபர்த்தியில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.

1968 – நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

1993 – இவர் மீது நடந்த கொலைமுயற்சி தடுக்கப்பட்டது.

2011 – மார்ச் 28 தேதி உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2011 – ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார்.