கத்ரி கோபால்நாத்

Kadri-Gopalnath

கத்ரி கோபால்நாத் அவர்கள், தென்னிந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாக்சஃபோன் இசை மேதை ஆவார். மேலைநாட்டு இசைக்கருவியைத் தன்னுடைய இரு விரல்களால், உதடுகளால் அடிமையாக்கி, உன்னத இசையை உள்ளம் உருக்கும் வகையில் அள்ளித்தரும் அற்புதக் கலைஞன். இந்தியாவில் சாக்சஃபோன் இசை என்றால், அனைவரின் மனதிலும் உடனே நினைவுக்கு வரும் குறிப்பிடத்தக்க ஒருவர். கேட்பவர்கள் மனதை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு, ஒரு சிறந்த சாக்சஃபோன் சக்ரவர்த்தி. இதனால், இசைத்துறையில் இவர் ஆற்றிய தொன்மையான பங்களிப்பிற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அரசால் ‘கலைமாமணி’ விருது’, ‘கர்நாடக கலாஸ்ரீ’, ‘சாக்சபோன் சாம்ராட், ‘கானகலா ஸ்ரீ’, ‘சங்கீத வாத்திய ரத்னா’, ‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன், லண்டன் என வெளிநாடுகளிலும் தன்னுடைய சாக்சஃபோன் இசையை அரங்கேற்றியுள்ளார். மேலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐயரால் ‘மெய்யான கர்நாடக இசை மேதை’ எனப் பாராட்டப்பட்டவர். இத்தகை மாபெரும் சிறப்புபெற்ற பத்மஸ்ரீ கலைமாமணி கத்ரி கோபால்நாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11,  1949

பிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா

பணி: சாக்சஃபோன் இசைக் கலைஞர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

கத்ரி கோபால்நாத் அவர்கள், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில், தந்தையார் தனியப்பா என்பவருக்கும், தாயார் கனகம்மாக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சஃபோனை வாசித்தப்போது, அந்த இசையால் மிகவும் ஈர்க்கப்பட்ட இவர், அன்றிலிருந்து சாக்சஃபோன் இசையில் ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசைக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சஃபோன் வாசிப்பை கற்கத் தொடங்கினார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசை மேதை டி. வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார்.

இசைப் பயணம்

அவர் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை செம்மை நினைவு அறக்கட்டளையில் முதன் முதலாக அரங்கேற்றினார். அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற “பாம்பே ஜாஸ் இசைவிழா” நிகழ்ச்சி, இவரின் இசை பயணத்தில் மாபெரும் திருப்புமுனையினை ஏற்படுத்தியது எனலாம். அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல கலிஃபோர்னியா ஜாஸ் இசைக் கலைஞர் ஜான் ஹன்டி என்பவர், இவருடைய சாக்சபோன் இசையில் மிகவும் ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல்,  இவருடன் இணைந்து இசை வழங்கவும் விரும்பினார். அதன் பிறகு, கர்நாடக இசையுடன் இணைந்து வழங்கப்பட்ட ஜாஸ் இசைக்கோர்வை, இசை நெஞ்சங்களை மிகவும் கவர்ந்தது.

1994 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூயட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய சாக்சஃபோன் இசையை அரங்கேற்றிய அவர், அத்திரைப்படத்தில் ‘கல்யாண வசந்தம்’ என்ற ராககத்தில் இவர் வாசித்த சாக்சபோன் இசை உலகப் புகழ்பெற்றது எனலாம். இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களிலும் சாக்சஃபோன் இசை பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், பெரும்பான்மை இசை சாக்சஃபோனினை கொண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், இத்திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன் என வெளிநாடுகளிலும், தன்னுடைய சாக்சஃபோன் இசையில் இந்தியப் பாரம்பரிய இசையைக் கொண்டு சேர்த்த இவருக்கு, பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, ஜெர்மனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த ‘அனைத்துலக செர்வாண்டினோ இசைவிழா’ போன்றவை மிகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. மேலும், 1994 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நடத்திய ‘உல்லாசவீதி’ என்னும் இசை விழாவில், மனதை மயக்கும் தன்னுடைய சாக்சஃபோன் இசையை வழங்கி மேலும் சிறப்பு பெற்றார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக் கலைஞர் இவர் தான் என்பது மேலும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

இசைத் தொகுப்புகள்

அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சாக்சஃபோன் இசை கலைஞரான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் இணைந்து ‘கின்ஸ்மென்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர், அதே நாட்டை சேர்ந்த ஜாஸ் புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஜேம்ஸ் நியூட்டன் என்பவருடன் இணைந்து ‘சதர்ன் பிரதர்ஸ்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். மேலும், இந்திய மேற்கத்திய இசைக் கலப்பினை பிரதிபலிக்கும் வகையில் ‘ஈஸ்ட்-வெஸ்ட்’ என்னும் ஒலி-ஒளி வழங்குதலையும், இந்தியாவில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற மேற்கத்திய செவ்விசை இசைக் கலைஞரான லுடுவிக்வான் பேத்தோவன் போன்றோரின் இசைப் பரிணாமங்களை உள்ளடக்கிய இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகளும் மரியாதைகளும்

  • 1996 – ‘கர்நாடக கலாஸ்ரீ’,
  • 1998 – ‘கர்நாடக ராஜ்யோட்சவா’ விருது.
  • 2004 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
  • 2004 – பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘மதுப்புறு முனைவர்’ பட்டம்.
  • தமிழ்நாடு அரால் ‘கலைமாமணி’ விருது.
  • ‘சாக்சஃபோன் சக்ரவர்த்தி’ மற்றும் ‘சாக்சஃபோன் சாம்ராட்’ விருது.
  • ‘கானகலா ஸ்ரீ’ மற்றும் ‘நாதபாசன பிரம்மா’ விருது.
  • ‘சுனதா பிரகாசிகா’ மற்றும் ‘சங்கீத வாத்திய ரத்னா’ விருது.
  • ‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ விருது.
  • ‘ஆசுதான வித்வான்’ மூலம் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்’, ‘ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்’, ‘ஸ்ரீ அஹோபில மடம்’ மற்றும் ‘ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்’ விருது.
  • மெட்ராஸ் ரோட்டரி கழகத்தின் மூலம் ‘மேதகைமை விருது’.

இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை எனக் கூறலாம், அத்தகைய அற்புதமானக் கலையை சாக்சஃபோன் என்னும் இசையில் ஜனரஞ்சகமாக்கி பல இசைக் கச்சேரிகளில் அதை அரங்கேற்றி, கோடானுகோடி ரசிகர்களை இசை என்னும் மழையில் நனையச் செய்தவர். கேட்பவர்களை சொக்கவைத்துவிடும் அளவிற்கு, இவரின் சாக்சஃபோன் இசை வெளிப்பாடு, மிக அற்புதமாக இருக்கும் எனலாம். குறிப்பாக சொல்லப்போனால், சாக்சஃபோன் வாசிப்பதில் கத்ரி கோபால்நாத் அவர்கள், ஒரு ‘மகா கலைஞர்’ என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது.