கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

Kalaivanar-N-S-Krishnan

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 29, 1908

பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்   

இறப்பு: ஆகஸ்ட் 30, 1957

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

சினிமா பயணம்

தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).

தேசபக்தி

பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி

1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.

இல்லற வாழ்க்கை

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

கொலைக் குற்றச்சாட்டு

இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.

மறைவு

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.